தொகுதி மறுவரையறை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமக்கலில் போராட்டம் நடத்தினார். திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத்தின் முன் கருப்புக்கொடி ஏற்றி, திட்டத்தின் நகலை எரித்தார்.
மறுவரையறை என்ற பெயரில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தன் வரம்பை மீறி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இன்று கொண்டு வரப்படும் சட்டத் திருத்தம் மூலம், தென் மாநிலங்களுக்கு பெயரளவுக்கு மட்டுமே தொகுதிகளை அதிகரிப்பதாக கூறி, வட மாநிலங்களுக்கு மிக அதிகமாக தொகுதிகளை உயர்த்தும் முயற்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என ஸ்டாலின் முன்பே அறிவித்திருந்தார்.
நாமக்கல் போராட்டத்தின் போது, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடாது என திமுகவினர் கோஷமிட்டனர்.
சென்னையில் மதிமுக அலுவலகம், அண்ணா அறிவாலயம், முதல்வர் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





