சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாலின சமத்துவ உரிமை மீறப்படுவதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை “தவறு” அல்லது “பிழை” என பிரகடனம் செய்வது நீதிமன்றங்களுக்கு சவாலான பணியாகும் எனக் கருத்து தெரிவித்தது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற மனுவின் பின்னணியில் எழுந்த மத உரிமைகள், சுதந்திரங்கள் தொடர்பான ஏழு முக்கிய சட்டக் கேள்விகளை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு தனிநபர் சுதந்திரத்தை உறுதி செய்தாலும், அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் விளக்கப்படக் கூடாது என வாதிட்டார். நடைமுறையில் உள்ள உண்மையான நம்பிக்கைகளை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டுமெனவும், மத நடைமுறைகளை புறநிலைக் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்வது உரிமைகளை பாதிக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மதத்திற்குள் பாகுபாடுகள் இருந்தால் நீதிமன்றங்கள் தலையிடலாமா, “அத்தியாவசிய மத நடைமுறை” என்பதை யார் தீர்மானிப்பது, சடங்குக்கும் நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளை அமர்வு எழுப்பியது. இதற்கு பதிலளித்த சிங்வி, பொதுநல மனுக்கள் மத நம்பிக்கைகளை ஆய்வு செய்யும் கருவியாக மாறக் கூடாது என்றும், மத விவகாரங்களில் நீதிமன்ற தலையீட்டுக்கான வரம்பு சாதாரண வழக்குகளை விட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், நெய் வாங்குதல், போக்குவரத்து ஏற்பாடு போன்ற நிர்வாக/வணிக நடவடிக்கைகளை அரசு ஒழுங்குபடுத்தலாம்; ஆனால் தெய்வத்தின் தன்மை அல்லது வழிபாட்டு முறையை நேரடியாக சீர்திருத்த முடியாது என அவர் கூறினார். சபரிமலையில் நடைமுறை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி’ அடையாளத்துடன் தொடர்புடையது என்றும், குறிப்பிட்ட வயது வரம்புக்கான கட்டுப்பாடு பாலினப் பாகுபாடு அல்ல என்றும், 10 வயதுக்குக் குறைந்தவர்களும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் அனுமதிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.