விசிக தலைவர் தொல். திருமாவளவன், தனது அக்கா மகளை வேட்பாளராக நிறுத்தியதை ‘வாரிசு அரசியல்’ என விமர்சிப்பதை மறுத்துள்ளார். குடும்ப உறவு இருப்பதற்காக மட்டும் தகுதியுள்ள ஒருவருக்கு வாய்ப்பு மறுப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனக்கு 63 வயதாகிறது என்றும், இன்னும் 15 ஆண்டுகள் அரசியலில் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார். சட்டசபையில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேர்தலில் போட்டியிட விரும்பியதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவிப்பதற்கு முன் மூத்த தலைவர்களுடன் ஆலோசிக்கவில்லை என்றும், பின்னர் வட மாநிலங்களைச் சேர்ந்த தலித் தலைவர்கள் தன்னை அணுகி, தேசிய அளவில் தலித் அடையாளத்துடன் இருக்கும் சுயேச்சையான குரலை பார்லிமென்ட் இழக்க நேரிடும் என்ற கவலையை தெரிவித்ததாகவும் கூறினார். கட்சியின் மூத்த தலைவர்களும் அதையே கூறியதால் போட்டியிலிருந்து விலகியதாகவும், இது ராஜதந்திர நடவடிக்கை; அரசியல் தவறு அல்ல என்றும் விளக்கினார்.
துணை முதல்வர் அல்லது அமைச்சர் பதவிக்காக போட்டியிட நினைத்ததாக எதிர்க்கட்சிகள் கூறுவது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் தன்னை பாதித்ததாகவும், அது கூட்டணியை பாதிக்க வேண்டாம் என்பதற்காகவே விலகியதாகவும் தெரிவித்தார். தனது விலகல் முடிவுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.
வேட்பாளர் தேர்வு குறித்து, இது வாரிசு அரசியல் அல்ல என்று அவர் வலியுறுத்தினார். மாலதியின் கணவர் திருக்குமரன் நீண்ட காலமாக கட்சிப்பணியாற்றியவர் என்றும், குடும்ப உறவு காரணமாக திறமையை மறுப்பது தவறு என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.





