சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக (TVK) கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கையை தலைவர் விஜய் புதன்கிழமை வெளியிட்டார். விவசாயி, ஆசிரியர், ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், மீனவர் உள்ளிட்டோர் மற்றும் ஓய்வு பெற்ற எஸ்பி அமிர்தலிங்கம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.
ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. திருக்குறளின் “அறம், பொருள், இன்பம்” என்ற அடிப்படையில் வாக்குறுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், “நேர்மை”யை அரசியல் சித்தாந்தமாக எடுத்துள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.
முக்கிய வாக்குறுதிகளில், 60 வயதுக்குள் உள்ள குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.2,500 செலுத்தப்படும் என கூறினார். மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
அதேபோல், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் தரமான பட்டு சேலை வழங்கப்படும் என்றும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் தாய்/பாதுகாவலருக்கு இடைநிற்றலைத் தவிர்க்க ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பாக 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என விஜய் தெரிவித்தார். கல்வி பகுதியில், அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12 வரை தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிட பள்ளிகள், இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் உத்தரவாதம், எதிர்கால திறன் பயிற்சி மையங்கள் மற்றும் ஏஐ மூலம் இயங்கும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.





