புதுடில்லி: ஏப்ரல் 16 காலை 11 மணிக்கு பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அரசு இன்று அறிமுகம் செய்தது.
மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் லோக்சபாவில் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
எம்பிக்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். விவாதத்தில், முஸ்லீம் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமாஜ்வாதி எம்பி அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். பெண்களை மத அடிப்படையில் பிரிக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறினார். மத ரீதியான இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பில் இடமில்லை என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 18 வரை நடைபெற உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் நடைபெறும்; நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.





