செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் சமீபத்தில் பிரசாரம் செய்த வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்திற்கு சென்றார்.

வி.சி.க. தரப்பின் தகவலின்படி, அமைச்சர் வரவேற்றதும் உள் அறையிலிருந்து ‘ஒயர்’ நாற்காலி கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர திருமாவளவன் முயன்றார்.

அதை பார்த்த அமைச்சர் அன்பரசன், பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வேண்டாம் என தடுத்து, ஒயர் நாற்காலியில் அமருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. திருமாவளவன் முதலில் மறுத்து, “நீங்கள் அமருங்கள்” என கூறி மீண்டும் பிளாஸ்டிக் நாற்காலிக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் மீண்டும் தடுத்து, உள்ளே இருந்து தனது குஷன் நாற்காலியை கொண்டு வரச் சொல்லி அதில் தானே அமர்ந்து கொண்டார். திருமாவளவன் ஒயர் நாற்காலியில் அமர்ந்தார்.

முன்னதாக, தி.மு.க. அமைச்சர் ராஜ கண்ணப்பன் குஷன் நாற்காலியில் அமர்ந்திருக்க, திருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்ததாக வெளியான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், அதுபோன்ற விமர்சனங்கள் மீண்டும் எழாமல் இருக்கவே அன்பரசன் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் வி.சி.க.வினர் தெரிவித்தனர்.