தேர்தல் பணிகளில் பண விவகாரத்தைச் சொந்த கட்சி நிர்வாகிகளை விட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ளக அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.
கடைசி நேர பண வினியோகம் தேர்தல் பணியில் முக்கியமானதாகக் கருதப்படுவதால், கட்சித் தலைமை வழங்கும் தொகையை வேட்பாளர்கள் வினியோகிக்கத் தொடங்கியுள்ளனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தேர்தல் களத்தில் உழைக்கும் உள்ளூர் நிர்வாகிகளை நம்பாமல், அப்பா, கணவர், தம்பி, அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையே பலர் இந்தப் பணிக்காக நியமித்துள்ளதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அடிப்படை அமைப்பாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் பொதுவாக நிர்வாகிகளுக்கே முன்னுரிமை என்றாலும், தலைமைக்கு நெருக்கமான சில முக்கிய வேட்பாளர்கள் உள்ளூர் நிர்வாகிகளை மீறி குடும்பத்தினரிடம் பண வினியோகப் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாக அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளன. சில இடங்களில் கட்சியினரிடம் பொறுப்பு கொடுத்தாலும், கண்காணிப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதாகவும் கூறப்படுகிறது.
பா.ஜ.க.வில் கூட கட்சித் தலைமை வழங்கிய பணத்தை கட்சியில் இல்லாத குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் கட்சியினரை மதிக்காமல் அதிகாரம் செலுத்துவதாகவும் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





