வேலூர் மாவட்ட காட்பாடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, தன் மீது வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார்.

காட்பாடியில் பேசிய அவர், பொதுவாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம் என கூறி, கடந்த 50 ஆண்டுகளில் தாம் ரூ.1 கூட லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால், அதே இடத்தில் “நெருப்பில் குதிப்பேன்” என்று சவால் விட்டார்.

மேலும், காட்பாடிக்கு நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சட்டக்கல்லூரி, டி.எஸ்.பி. அலுவலகம், பல்கலைக்கழகம், மருத்துவமனை உள்ளிட்ட வசதிகளை கொண்டு வந்ததாக கூறினார். இவ்வளவு செய்தும் சிலர் தன்னை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் தெரிவித்தார்.

தான் கத்தரிக்காய் விற்றது உள்ளிட்ட பல வேலைகளை செய்த “சாதாரண பள்ளி பையன்” என்றும், தன்னை எளிதாக எடை போட வேண்டாம் என்றும் கூறிய அவர், டிகிரி முடித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்ததாக நினைவூட்டினார். ஜாதி அரசியலை சாடிய அவர், “எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டியிட முடியுமா?” என கேட்டு, ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்; இனி வரும் தேர்தலில் தாம் நிற்பேனா என்பது தெரியாது என்றும் கூறினார்.

இதற்கிடையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்பாடியில் உள்ள தன் இல்லத்தில் கருப்புக் கொடி ஏற்றினார். பின்னர் பேட்டியில், ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் நிலையில் மறுவரையறை அவசியமா என கேள்வி எழுப்பி, பா.ஜ. வலையில் அ.தி.மு.க. சிக்கியதால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டினார். சமீபத்தில் கட்சி தொடங்கிய நடிகர் விஜயும் மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி, அவர் இன்னும் யாருடைய பிடியிலும் அகப்படவில்லை போல எனவும் கருத்து தெரிவித்தார்.