தேர்தல் காலத்தை பயன்படுத்தி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பிரபல பணப்பரிவர்த்தனை செயலிகளின் பெயர்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் புதிய வகை மோசடிகள் பரவி வருவதாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதிகாரிகள் கூறுவதன்படி, ‘ஹோலி ஸ்பெஷல்’ எனக் கூறி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா படங்களுடன் ஜன்தன் யோஜனா திட்டத்தில் இணைந்து ரூ.5,000 சலுகை பெறலாம் எனும் ‘லிங்க்’ பகிரப்படுகிறது. இதேபோல் ஜிபே, போன் பே பெயரில் கேஷ்பேக் அல்லது ரிவார்டு கிடைக்கும் எனக் கூறியும் ‘லிங்க்’கள் அனுப்பப்படுகின்றன.

மேலும் த.வெ.க. தலைவர் விஜய் படத்துடன், “ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1,499 வழங்கப்படுகிறது; ‘கெட் ஆபர்’ பகுதியை கிளிக் செய்யவும்” எனக் கூறி ‘லிங்க்’ அனுப்பப்படும் தகவல்களும் பரவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இத்தகைய லிங்குகள் மூலம் பயனர்களை ஏமாற்றி தகவல்களைப் பெற முயற்சி நடக்கிறது என அவர்கள் கூறினர்.

டெலிகிராமில் ஆபாசப் படங்கள் உள்ளதாகக் காட்டி, தெரிந்தோரின் பெயர்களில் ‘லிங்க்’ அனுப்பும் வலையும் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைத் தொட்டால் ஓ.டி.பி. வரும்; அதன் பின்னர் கணக்கு ‘ஹேக்’ ஆகி, வெளியே வர ‘பிரைம்’ உறுப்பினராக வேண்டும் எனக் கூறி வங்கி விவரங்களை கேட்டு மோசடி செய்யப்படலாம் என தெரிவித்தனர்.

இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், வடநாட்டு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஆய்வு செய்கிறோம் என்றும் போலீசார் கூறினர். இதுவரை பண இழப்பு குறித்து புகார் வரவில்லை என்றாலும், பேஸ்புக், இன்ஸ்டா போன்ற தளங்களில் வரும் சந்தேகமான ‘லிங்க்’களை புறக்கணிக்கவும்; சலுகைகள் என்றால் ஜிபே, போன் பே போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளுக்குள் மட்டுமே இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.