தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்தார். சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட குப்பனூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் இதை கூறினார்.

இந்த தேர்தல் தமிழக மக்களுக்கும், தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் “ஒரு குடும்பத்திற்கும்” இடையிலான போட்டி என அவர் வர்ணித்தார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தற்போதைய ஆட்சியில் காவல்துறையினருக்கும் பாதுகாப்பில்லை என கூறிய இபிஎஸ், கடந்த ஆறு மாதங்களில் ஆறு காவலர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன என குற்றம்சாட்டிய அவர், மாணவர்கள் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படுவதாக கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

மேலும், ஊழல் மற்றும் நிறைவேறாத வாக்குறுதிகள் குறித்து திமுக அரசை விமர்சித்த இபிஎஸ், கல்விக் கடன் ரத்து, எரிவாயு மானியம், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு போன்றவை நிறைவேறவில்லை என்றார். அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்ட அவர், “அதிமுக வின்னிங்; நல்லாட்சி கம்மிங்” என்ற முழக்கத்துடன் உரையை முடித்தார்.