த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் கட்சியின் வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், முரண்பாடுகள் உள்ளதாகவும் கூறி, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த இரு வேட்பு மனுக்களிலும் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் ஒன்றுக்கொன்று மாறுபடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவின் விவரப்படி, பெரம்பூர் தொகுதி வேட்பு மனுவில் விஜய் தனது சொத்து மதிப்பை ரூ.115 கோடி என குறிப்பிட்டுள்ளார்; ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பு மனுவில் ரூ.220 கோடி என தெரிவித்துள்ளார். இதனால், அவர் தெரிவித்த சொத்து விவரங்கள் முழுமையா, உண்மையா என்பதை விசாரிக்க வேண்டும் என பெரம்பூர் தொகுதி வாக்காளர் விக்னேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா தொடர்பாகவும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஜி.தேவராஜன், ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி இயக்குநராக உள்ளதாக கூறப்படும் சில நிறுவனங்களின் சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் அது முறையாக பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து சொத்து விவர மறைப்பை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.





