வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் மற்றும் டோக்கன் வழங்கப்படுவதாக கூறி, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (ஏப்.17) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், வழக்கறிஞர் ஷியாம் குமார், சென்னை துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நோக்கில், கியூஆர் குறியீடு கொண்ட ரூ.10,000 மதிப்புள்ள டோக்கன்கள் வினியோகிக்கப்படுவதாக முறையிட்டார்.

அதேபோல், தி.மு.க. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை வழங்குவதாகவும், இதைத் தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால் அதே நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை வழக்கறிஞர்கள் கே. ரவீந்திரன் மற்றும் ஏ.பி. சூரியபிரகாசம் ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அவை இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.