புதுடில்லி: நாட்டின் பெண்கள் அதிகாரமடையவும் அவர்களை பெருமைப்படுத்தவும் இது முக்கியமான தருணம் எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த வாய்ப்பை எம்பிக்கள் தவற விடக்கூடாது என்று வலியுறுத்தினார்.
வெளியிட்ட அறிக்கையில், மசோதாவைச் சுற்றி பரப்பப்பட்ட தவறான புரிதல்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டதாகவும், சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டதாகவும், எதிர்ப்புணர்வை உருவாக்கக்கூடிய சிக்கல்கள் தீர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த நான்கு தசாப்தங்களாக பெண்கள் இடஒதுக்கீடு விவகாரம் அரசியல் விளையாட்டுகளுக்குள் சிக்கியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கடந்தும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் இந்திய பெண்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவம் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என மோடி கூறினார். லோக்சபா வாக்கெடுப்பில் உரிய ஆலோசனையுடன், முழுமையான அக்கறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், “பெண்கள் சக்தி”யின் உணர்வுகளை புண்படுத்தும் எந்தச் செயலும் எம்பிக்களால் நடக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார். கோடிக்கணக்கான பெண்களின் கண்கள் நாடாளுமன்றத்தின் மீதும் அதன் நோக்கங்களின் மீதும் இருப்பதாகச் சொல்லி, தாயார், சகோதரிகள், மகள்கள், மனைவி ஆகியோரை நினைத்து மனசாட்சியிடம் கேட்டு முடிவு எடுக்குமாறு கேட்டார்.
மசோதா பரந்த ஒற்றுமையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பெண்கள் மேலும் அதிகாரம் பெறுவார்கள்; நாட்டின் ஜனநாயகமும் வலுப்படும் என்றும் மோடி கூறினார். மக்கள் தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்து அனைவரும் இணைந்து வரலாறு படைப்போம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.





