மஹாராஷ்டிராவின் நாசிக்கில் இயங்கி வரும் ஒரு தனியார் ஐடி-பிபிஓ நிறுவனக் கிளை, சர்ச்சை பெரிதாகியதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
பெண் ஊழியர்கள் அளித்த புகார்களில், கடந்த நான்கு ஆண்டுகளாக முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு உள்ளிட்ட பாலியல் தொல்லைகள் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துதல், மாட்டிறைச்சி சாப்பிட வற்புறுத்துதல், ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் பேச்சுகள் போன்றவை நடந்ததாகவும், மறுத்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டதும், அவர்கள் ஒருங்கிணைந்து பெண்களுக்கு தொல்லை அளித்ததும் உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏழு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்; தலைமறைவாக உள்ள மனிதவளத் துறை அதிகாரியை தேடி வருகின்றனர்.
நிறுவனம் தரப்பில், பாலியல் அத்துமீறல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிஇஓ தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கட்டாய மதமாற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசிய மகளிர் கமிஷன் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு, நாசிக்கிலுள்ள அந்த நிறுவனத்தில் நேரடி விசாரணைக்காக உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளது.





