லோக்சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜ மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மகளிர் ஒதுக்கீடு என்ற பெயரில் தேர்தல் வரைபடத்தை மாற்றி, தென் மாநிலங்கள், வடகிழக்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பலவீனப்படுத்தும் முயற்சி நடக்கிறது என அவர் கூறினார்.
இந்த மசோதா உண்மையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில்லை என்றும், இது இந்தியாவின் அரசியல் சமநிலையை மாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாகவும் ராகுல் விமர்சித்தார். தாழ்த்தப்பட்டோர், ஓபிசி பிரிவினர் மற்றும் பெண்களை சமூகம் எப்படி கையாள்கிறது என்பதை பதிவு செய்யும் வகையிலான சட்டமாக இது மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகவும் அவர் கேள்விகளை எழுப்பினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறும் தகவல்களைக் குறிப்பிட்டு, அந்த தரவின் அடிப்படையில் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுமா என்பது முக்கியமான கேள்வி என ராகுல் கூறினார். அடுத்த 15 ஆண்டுகளுக்கும் ஓபிசி பிரதிநிதித்துவம் கிடைப்பதைத் தடுக்கும் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தெற்கு, வடகிழக்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் எந்த முயற்சியையும் எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என்றும், இந்த மசோதா நிறைவேறாது என்றும் ராகுல் வலியுறுத்தினார். மேலும், அரசமைப்பை விட மனுஸ்மிருதியே பாஜவுக்கு முக்கியம் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் விமர்சித்ததற்கு பாஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.





