புதுடில்லி: லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பயன்படுத்திய சொற்றொடருக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதத்தில் பேசிய ராகுல், பிரதமரை ‘வித்தைக்காரர்’ என குறிப்பிட்டு விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜ எம்பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்திய வார்த்தை “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றும், இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். நாட்டுமக்கள் தேர்ந்தெடுத்த பிரதமரை இவ்வாறு தொடர்ந்து குறிப்பிடுவது, மக்களையே விமர்சிப்பதற்கு சமம் எனவும் அவர் வாதிட்டார்.

மேலும், அந்த வார்த்தையை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் ராகுலை விமர்சித்து, அவர் தவறாக வழிநடத்தும் அறிக்கை அளித்ததாக குற்றம்சாட்டினார். ஓபிசிக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு பார்லிமென்டில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ராகுலின் கருத்தை அவர் எதிர்த்தார். மேலும், நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் ஓபிசி இட ஒதுக்கீட்டை ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்ததாகவும் கூறி, அதற்கான விளக்கத்தை ராகுல் தர முடியுமா எனவும் அவர் சவால் விடுத்தார்.