பா.ஜ.க.வைச் சேர்ந்த டில்லி முதல்வர் ரேகா குப்தா, லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்றும், “இந்தியா எனும் பெரு நெருப்போடு விளையாடுகிறார்” என்றும் கோவையில் எச்சரித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் ‘பிக்கி புளோ’ மகளிர் அமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். பார்லிமென்டில் அந்த மசோதா முழுப் பெரும்பான்மையுடன் நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மிகப்பெரிய சமூக சீர்திருத்தமாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையாகவும் அவர் வர்ணித்தார். இது பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்துடன் அரசியல் சக்தியை உறுதி செய்வதோடு, ஒருங்கிணைந்த ஜனநாயகத்தையும் வலுப்படுத்தும் என்றார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் வலுவான பொருளாதார அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், ரயில்வே நவீனமயமாக்கல், விமான நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளை சுட்டிக்காட்டினார். இதனால் சிறு நகரங்களிலும் சுற்றுலா மேம்படுவதாகவும் தெரிவித்தார்.
கோவை குறித்து பேசுகையில், வேகமாக வளரும் தொழில் நகரமான கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் வராதது வருத்தமளிப்பதாக ரேகா குப்தா கூறினார்.




