சென்னை: தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ரூ.8,000 ‘கூப்பன்’ தொடர்பான அச்சிடப்பட்ட மாதிரிகளை வீடுதோறும் வழங்குவதை கட்டுப்படுத்துவதில் தேர்தல் கமிஷன் சிரமம் எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பிரிஜ்’ வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும்; அதை பயன்படுத்தி பிரிஜ், வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன், இன்டக்ஷன் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை விருப்பமான கடைகளில் வாங்கலாம் என வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த வாக்குறுதியை மக்களிடம் கொண்டு செல்ல, கூப்பன் மாதிரிகளை அச்சிட்டு வீடுதோறும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளன.
மாதிரி கூப்பன் வினியோகம் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் கமிஷன் எச்சரித்திருந்தாலும், புகார்களுக்கு பிறகும் கட்டுப்பாடு போதிய அளவில் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. போலீசார் ஒத்துழைப்பு போதிய அளவில் இல்லாததால் நடவடிக்கையில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத் தலைமை தேர்தல் அலுவலகத்தின் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், கூப்பன் வினியோகத்தில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை, சிவகாசி உள்ளிட்ட இடங்களில் அச்சிடப்பட்ட கூப்பன்கள் மாவட்டங்களுக்கு மொத்தமாக அனுப்பப்பட்டதாகவும், சில அச்சகங்களில் தேர்தல் பறக்கும் படை ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





