மேற்கு வங்கத்தில் மேல்முறையீட்டில் தகுதி நிரூபிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு நாளுக்கு நெருக்கமாக இருந்தாலும் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கிடையில், எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகளில் சுமார் 91 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 34 லட்சம் பேர் பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்ட தேர்தல் தேதி நெருங்கிய நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முடக்கி வைத்ததால், மேல்முறையீட்டில் உள்ளவர்கள் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத நிலை உருவானதாக கூறி, அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். தகுதி நிரூபித்தவர்களுக்கு இதே தேர்தலிலேயே ஓட்டளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, பெயர் சேர்க்கும் காலக்கெடுவை நீட்டிக்கவும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய் மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசியல் சாசனத்தின் 142வது பிரிவின் கீழான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கும் இரண்டு நாட்கள் முன்புவரை மேல்முறையீட்டில் தகுதி உறுதி செய்யப்பட்டவர்களின் பெயர்களை சேர்த்து, துணை வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்; அந்த பட்டியலில் உள்ளவர்களை ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த உத்தரவின் படி, ஏப்.21க்குள் தீர்ப்பாயங்கள் தகுதி உறுதி செய்தவர்கள் முதல் கட்டத்தில், ஏப்.27க்குள் உறுதி செய்யப்பட்டவர்கள் இரண்டாம் கட்டத்தில் ஓட்டளிக்க முடியும்.





