தாம்பரம் சட்டசபைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஓசி பஸ் இல்லை; ஏசி பஸ்கள் மட்டுமே இயக்கப்படும், பயணிகள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக தரமான சாலைகள் வழங்குவேன் என்றும் அவர் கூறினார்.
ஆட்சியைத் தந்தால் கல்வி முறையை முழுமையாக மாற்றி, கற்பிக்கும் வழிமுறைகள் மற்றும் கட்டட வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் உலகத் தரத்திற்கு உயர்த்துவேன் என அவர் தெரிவித்தார். கல்விக்காக ஒரு ரூபாயும் கட்டணம் வாங்கமாட்டேன் என்றும் கூறினார்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி, தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பதாக மக்கள் நினைக்கும் தரத்தை அரசு மருத்துவமனைகளிலேயே வழங்குவேன் என்றும், சிகிச்சைக்கும் கட்டணம் இருக்காது என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். அரசு மருத்துவமனைக்கு சென்றால் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே இலக்கு எனவும் கூறினார்.
மேலும் குடிநீர் விற்பனைக்கும் பிளாஸ்டிக் விற்பனைக்கும் தடை விதிப்பேன் என்றும், தூய குடிநீரை வீட்டு வாசலிலேயே இலவசமாக வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய மூன்றும் கட்டணமின்றி கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.





