ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீண்டும் பேசினார். தானே முதல்வராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், இரவு வரை தானே முதல்வர் ஆகப்போகிறேன் என்ற நிலை இருந்ததாகவும், ஆனால் காலையில் பார்த்தபோது “காட்சி மாறிவிட்டது” என்றும் கூறி, கூவத்தூரில் நடந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.
மேலும், “அந்த ஆள் கையில் பெட்டி இருந்தது; என் கையில் பெட்டி இல்லை” என்று கூறி, கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு வேறு காரணிகள் இருந்ததாகத் தோன்றும் வகையில் பேசினார். சசிகலா தன்னிடம் பேசியதாகவும், கட்சி உடையாமல் பார்த்துக்கொள்வதே தனது நிலைப்பாடு என்று கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
தன்னை முதல்வர் வேட்பாளராக கூறப்பட்டதாகவும், ஆதரவு தெரிவித்திருந்த போதும் இறுதி நிமிடத்தில் நிலைமை மாறியதாகவும் செங்கோட்டையன் கூறினார். கூவத்தூரில் நடந்தவை காரணமாக தன்னிடம் வர வேண்டிய பதவி கைநழுவியதாக அவர் இந்த உரையில் வெளிப்படுத்தினார்.





