நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) மற்றும் பாஜவை கடுமையாக தாக்கினார்.
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் நடந்தால் தமிழகத்தின் குரலை “நசுக்க” முயற்சி என அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா கூறும் உறுதிமொழி போதாது; லோக்சபாவில் பிரதமர் தரும் சட்டபூர்வமான உறுதி வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த மறுசீரமைப்பு பாஜவும் அதற்கு “ஜால்ரா” போடும் அதிமுகவும் உருவாக்கும் பேராபத்து என கூறிய ஸ்டாலின், அதற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றியுள்ளதாக தெரிவித்தார். “டில்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள் தான் அடிபணிவார்கள்; தன்மானம் உள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம்” எனவும் அவர் கூறினார்.
இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை “அவலமான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு” என விமர்சித்த ஸ்டாலின், குட்கா விவகாரம் முதல் டெண்டர் வரை ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி வன்கொடுமை போன்ற சம்பவங்களை குறிப்பிட்டும் பேசினார். அதிமுக ஆட்சி இப்படியெனில் நேரடியாக பாஜ ஆட்சி வந்தால் நிலைமை மேலும் மோசமாகும் என எச்சரித்தார்.
இந்த தேர்தலை “தமிழ்நாடா, டில்லியா” என்ற தேர்வாக மக்கள் பார்க்க வேண்டும் என கூறிய ஸ்டாலின், தவறுகளிலிருந்து தப்பிக்க இபிஎஸ் “பாஜ என்ற வாஷிங் மிஷினில் சரணடைந்தார்” என விமர்சித்தார். தமிழகத்தை சிதைக்க நினைக்கும் பாஜவையும் அதற்கு அடிமையாக இருக்கும் அதிமுகவையும் வேரோடு வீழ்த்த வேண்டும்; தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.




