தமிழக சட்டசபை தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறும் வரை ‘டிஎன் 2026’ திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
இயக்குநரும் நடிகருமான நட்ராஜ் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் முன்னோட்டத்தை வெளியிட்டது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இப்படத்தை, தேர்தல் செயல்முறை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர், வழக்கறிஞர் எம்.எல். ரவி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, படம் ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் மனு தொடரத் தகுதியற்றதாகும் எனக் கூறி, மனுவை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதற்கிடையில், நடிகர் விஜயை கிண்டல் செய்யும் வகையில் சில காட்சிகள் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.





