திருநெல்வேலி கவின் கொலை வழக்கைச் சார்ந்த விசாரணையில், ஆணவக் கொலைகளைத் தடுக்கும் தனிச் சட்டம் இயற்றுவது தமிழக அரசின் பரிசீலனையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசு தரப்பு தெரிவித்தது.
27 வயதான கவின் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியவர். அவர், தனியார் மருத்துவமனையில் சித்தா மருத்துவராக பணிபுரியும் பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தாரிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும் மனுவில் கூறப்பட்டது.
மனுவின் விவரப்படி, 2025 ஜூலை 27 அன்று சமரசப் பேச்சுக்காக வருமாறு பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அழைத்ததாகவும், பின்னர் அரிவாளால் தாக்கப்பட்டதில் கவின் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்தனர்; சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணகுமார் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விசாரணை முடிந்து திருநெல்வேலி கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆணவக் கொலை தடுப்பு தனிச் சட்டம் இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி, மேலும் விசாரிக்க எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.





