இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் இன்னும் 6 மணி நேரத்தில் தொடங்கும் எனவும் அவர் கூறினார்.
லெபனானில் இருந்து செயல்படும், ஈரான் ஆதரவுள்ள ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது கடும் தாக்குதல் நடத்தியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தணிக்க இரு தரப்பையும் நேரடியாக பேச வைக்க அமெரிக்கா முயன்றதாக கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதர்கள் இடையே உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 1993க்குப் பிறகு இரு நாடுகளும் நேரடியாக பேசியது இதுவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், லெபனான் அதிபர் ஜோசப் ஆவோன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் நல்ல உரையாடல் நடந்ததாகவும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக 10 நாள் போர் நிறுத்தத்திற்கு இருவரும் சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அமைதி முயற்சிகளை முன்னெடுக்க துணை அதிபர் வான்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ மற்றும் அமெரிக்க ராணுவத் தலைமையுடன் இணைந்து இரு நாடுகளுடனும் பணியாற்ற உத்தரவிட்டதாகவும், இது தனது “10வது” போர் நிறுத்த முயற்சி எனவும் அவர் கூறினார்.





