தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர்-அரசியல்வாதி விஜய் முன்வைத்த ஒரு வித்தியாசமான வேண்டுகோள் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. சென்னையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசிய அவர், வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக போடுமாறு பெண்களிடம் கேட்டுக்கொண்டார்.

“தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது” என குறிப்பிட்ட விஜய், இதை “அம்மா, அக்கா, தங்கை”களுக்கான வேண்டுகோளாகவும், தமக்கு அளிக்கும் ஆதரவாகவும் விளக்கினார். இதைக் கேட்ட கூட்டம் கைதட்டி, விசில் அடித்து உற்சாகம் காட்டியது.

இதற்கு முன்பு, ஊர் ஊராக தீவிர பிரசாரம் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு விஜய்… ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறேன்” என்ற அவரது பேச்சும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அவர் மற்ற கட்சி தலைவர்களைப் போல தீவிர களப்பிரசாரம் செய்யவில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது.

நேற்றைய வேண்டுகோளுக்குப் பிறகு, பல வீடுகளில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ‘விசில்’ சின்னத்தை கோலமாக போடுமாறு வீட்டிலுள்ளவர்களை வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. கோலம் போடத் தெரியாத சில இளம் பெண்கள் சாக்பீசில் முதலில் ‘விசில்’ வரைந்து, அதன் மீது கோலமாக அமைக்க முயல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதைக் கண்ட சில பெரியவர்கள், “எப்படியாவது இந்தக் காலத்து பிள்ளைகள் கோலம் போட பழகினால் நல்லதுதான்” என்று மகிழ்ச்சியடைவதாகவும் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.