சென்னை: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கு ரூ.60,000 மதிப்பிலான நேரடி பலன் கிடைக்கும் என கூறி, அக்கட்சியினர் வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

இதற்கிடையில், தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இல்லத் தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரூ.8,000 “மாதிரி கூப்பன்” அச்சிட்டு வீடுதோறும் வழங்கி வருகின்றனர்.

அதற்கு போட்டியாக, அ.தி.மு.க. தரப்பில் ரூ.60,000 பலன் எனக் கூறும் துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ரூ.10,000 காசோலை போன்று வடிவமைக்கப்பட்ட துண்டு பிரசுரமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. துண்டு பிரசுரத்தில், குடும்ப உதவித்தொகை ரூ.10,000, மகளிருக்கு மாதம் ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.24,000, இலவச சிலிண்டருக்கான தொகை ரூ.3,000, ரேஷனில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய்க்கு ரூ.3,000, இலவச பஸ் பயணத்தால் சேமிப்பு ரூ.6,000, பொங்கல் பரிசு ரூ.2,000, இலவச ஃப்ரிட்ஜ் ரூ.12,000 என மொத்தம் ரூ.60,000 நேரடி பலன் என கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.