சென்னை: பார்லிமென்டில் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு திமுக எதிராக வாக்களித்ததைத் தொடர்ந்து, அரசியல் மோதல் சமூக வலைதளங்களிலும் தீவிரமடைந்துள்ளது. இதை முன்னிட்டு பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் திமுகவை குறிவைத்து ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் வகையில், தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை பார்லிமென்டில் தாக்கல் செய்ய பாஜ திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவை கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்தனர். இதனால் மசோதா தோல்வியடைந்தது. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிராக வாக்களித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து பாஜ தரப்பினர் திமுக மீது விமர்சனங்களை முன்வைத்து, பெண்கள் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு திமுக எதிர்ப்பதாக குற்றம்சாட்டினர். சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் அதிகரித்த நிலையில், #DMKBackstabsWomen என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்ததுடன், #NDAWithTamilNadu என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் வைரலாக்கி வருகின்றனர்.





