மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, உலகின் முதல் பிரத்யேக ‘ஏர் டாக்சி’ நிலையத்தை உருவாக்கி துபாய் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் நான்கு அடுக்கில் இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் செங்குத்து புறப்பாடு–தரையிறக்கத்திற்கான ‘வெர்டிப்போர்ட்’ பகுதி, விரைவு சார்ஜிங் உட்கட்டமைப்பு, இரண்டு அடுக்கு கார் பார்க்கிங் மற்றும் குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த சேவை முக்கிய வழித்தடங்களில் பயண நேரத்தை பெரிதும் குறைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து பாம் ஜுமைரா வரை 36 கி.மீ. தூரம் சாலை வழியாக சுமார் 45 நிமிடங்கள் ஆகும் நிலையில், ஏர் டாக்சி மூலம் சுமார் 10 நிமிடங்களில் சென்றடைய முடியும் என கூறப்படுகிறது.

ஏர் டாக்சி சேவையை மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். தொடக்கத்தில் விமான நிலையம், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் மற்றும் வணிக மையங்கள் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பின்னர் நகரின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தயார் நிலையில் உள்ள திட்டத்தை துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் வணிக ரீதியான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.