பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் கோவிலை தானாகவே “ஆக்கிரமிப்பு” என வகைப்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு வீரராகவன் கிராமத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவில், பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியை மாவட்ட கலெக்டர் உரிய முறையில் பராமரிக்க உத்தரவிட வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த இயேசுதாஸ் கொர்னேலியஸ் மனு தாக்கல் செய்தார். அந்த இடத்தில் கோவில் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணை நடந்தபோது, அரசு தரப்பு அந்த நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் இருப்பதாக தெரிவித்தது. மொத்தம் 9,000 சதுர அடி பரப்பளவில், 2,260 சதுர அடியில் மட்டுமே கோவில் உள்ளதாகவும் கூறப்பட்டது.
உத்தரவில், சமய வழிபாடும் கோவில் பராமரிப்பும் சமூக நோக்கத்துடன் தொடர்புடையவை என்றும், அந்தப் பகுதி மக்களின் மனநல மேம்பாட்டுக்கும் ஆதாரமாக இருக்க முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. “ஆக்கிரமிப்பு” என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டும் அப்பகுதி மக்களின் நம்பிக்கை மற்றும் பற்றுறுதியை சீர்குலைக்க முடியாது என்றும் கூறப்பட்டது.
மேலும், ஏரி அல்லது ஆறு போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்தக் கோவில் கட்டப்படவில்லை; இது ஆக்கிரமிப்பும் அல்ல என நீதிமன்றம் தெரிவித்தது. மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.





