திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ. அப்துல் சமது போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெறச் செய்ய மாவட்டத்தில் அமைச்சர்கள் நேருவும் மகேஷும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணப்பாறை தொகுதி, அமைச்சர் மகேஷ் மாவட்ட செயலராக உள்ள தெற்கு மாவட்ட அமைப்புக்குள் வருகிறது. பிரசாரத்தின் போது சில ஊர்களில், தொகுதிக்கு வேட்பாளர் அதிகம் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எதிர்ப்பும் எழுந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தி.மு.க.வில் சீட் கிடைக்காத சில நிர்வாகிகளும், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களில் சிலரும் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடவில்லை என தகவல். இதையடுத்து, நேரு தனது ஆதரவாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கி, தீவிரமாக பிரசாரம் செய்து அப்துல் சமதுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது.
அதிருப்தி நிர்வாகிகளை அழைத்த அமைச்சர் மகேஷ், ஒழுங்காக வேலை செய்து வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்; இல்லையெனில் தேர்தலுக்குப் பிறகு பதவியில் சிக்கல் வரும் என எச்சரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதுபோலவும் சில நிர்வாகிகள் இன்னும் களத்தில் தீவிரமாக இறங்கவில்லை என்றும், சிலர் அ.தி.மு.க.க்கு சாதகமாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால் கட்சிக்குள் ‘காலை வாரிவிடுவார்களோ’ என்ற அச்சத்தில், நேருவும் மகேஷும் மணப்பாறை தொகுதியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற தி.மு.க. வேட்பாளர்களுக்கு கூட இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், அமைச்சர்களின் தீவிரம் ம.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் தகவல்.





