தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.க.) வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.18) கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் வரும் 21ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கு முன் ஏப்.15 அன்று நாகர்கோவிலில் நடந்த ‘ரோடு ஷோ’வில் மோடி பங்கேற்றார்; அதில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியும் கலந்து கொண்டார்.

இன்று மாலை கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று, கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

இந்த கூட்டத்தில் பழனிசாமி உள்ளிட்ட தே.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்.19) ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ. வேட்பாளர் கிர்த்திகாவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். மேலும், நாளை மாலை சென்னை மயிலாப்பூரில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து ‘ரோடு ஷோ’ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.