மஹாராஷ்டிரா நாசிக்கில் செயல்படும் பிரபல ஐ.டி. நிறுவனத்தின் பி.பி.ஓ. தொடர்பான விசாரணையில், கட்டாய மதமாற்றம் நடந்ததாக கூறப்படும் புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக புகார்கள் எழுந்தன. விசாரணையில், நிறுவனத்தின் ‘டீம் லீடர்’க்கள் ஒன்றாகச் சேர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மதமாற்றத்தை மறுத்த பெண்களுக்கு தொல்லை அளிக்கப்பட்டதாகவும் ரகசிய விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.

இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு பெண் உட்பட 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதவளப் பிரிவு அதிகாரி நிடா கான் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதில், தவுசிப் ஆதார் என்பவரின் மொபைலில், இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு புகைப்படம் கிடைத்ததாக போலீசார் கூறினர்; அதில் ‘கோபால்’ என பெயர் குறிப்பிடப்பட்ட நபர் முஸ்லிம் தொப்பி அணிந்திருந்ததாக சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து கோபால் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் அப்போது கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், தனது பெயரை ‘குல்ஷன்’ என மாற்றிக் கொண்டதாகவும் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. 2023ல் அவரது தந்தையின் உடல்நலக் குறைபாட்டை சாதகமாக பயன்படுத்தி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி மதமாற்றம் செய்ததாகவும், இது நிறுவனத்தில் தொடர்ச்சியாக நடந்ததாக கூறப்படும் செயல்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் போலீசார் கூறினர்.