இந்திய ஈட்டி எறிதலில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஒலிம்பிக் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் பாராலிம்பிக் சாம்பியன் சுமித் அன்டில் ஆகியோர், பயிற்சியாளர் நாவல் சிங் மீது இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு (எஸ்.ஏ.ஐ.) புகார் கடிதம் எழுதியுள்ளனர்.
சுமித் அன்டில் தனது கடிதத்தில், பயிற்சியாளர் குடித்து விட்டு வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவதூறாகப் பேசி குரல் பதிவுகளை அனுப்புவதாகவும், தொடர்ந்து மனதளவில் தொல்லை தருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நீரஜ் சோப்ரா, நவ்தீப் உள்ளிட்ட பலரையும் மரியாதை குறைவாகப் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக எஸ்.ஏ.ஐ. தரப்பில் சமரசம் செய்ய முயற்சி நடந்ததாகவும், இம்முறை விடாமல் நடவடிக்கை கோருவதாகவும், தன்னைப் போல பலரும் வேதனையில் இருப்பதாகவும் அன்டில் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் 2021ல் தங்கம், 2024ல் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ராவும் எஸ்.ஏ.ஐ.-க்கு எழுதிய கடிதத்தில், தன்னையும் குடும்பத்தினரையும் சக விளையாட்டு நட்சத்திரங்களையும் கண்ணியத்தை மீறி தகாத முறையில் பேசுவதாக கூறி, இது விளையாட்டு அமைப்புக்கே அவப்பெயர் தருவதாகவும், நாவல் சிங் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாரா குண்டு எறிதல் முன்னாள் வீராங்கனை தீபா மாலிக், 2012 பாராலிம்பிக் மற்றும் 2014 ஆசிய விளையாட்டுக்கான பயிற்சிகளின்போது நாவல் சிங் தொடர்ந்து தொல்லை தந்ததாக முன்பே கூறியிருந்ததாகவும், அதனால் 2014ல் அவரிடம் பயிற்சி பெறுவதை நிறுத்தியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





