இஸ்லாமாபாத்: எதிர்காலத்தில் தாக்குதல் அல்லது மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தில், ராவல்பிண்டியில் உள்ள முக்கியமான நுார்கான் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக, சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் இந்த தளம் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டு கடந்தும் பழுது பார்க்கும் பணிகள் தொடர்வது, ஏற்பட்ட சேதத்தின் தீவிரத்தை காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்களின்படி, தளத்தில் பாதுகாப்பு கட்டமைப்புகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. ராணுவ தளபதி அசிம் முனீரின் தலைமையில், போர் விமானங்களை மறைத்து வைக்க உதவும் பிரத்யேக ஹேங்கர்கள் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த ஹேங்கர்கள் வெறும் மழை, வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காக மட்டுமல்ல; உளவு கண்காணிப்பில் இருந்து விமானங்களை மறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்தவெளியில் நிறுத்தப்படும் விமானங்களை செயற்கைக்கோள் மூலம் எளிதில் கண்காணித்து தாக்க முடியும் என்ற அச்சமே இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும், ஈரான்–இஸ்ரேல் மோதலில் நவீன ட்ரோன் தாக்குதல்கள் காட்டிய அபாயங்களை கருத்தில் கொண்டு, திறந்தவெளியில் எந்தவொரு முக்கிய வளங்களையும் வெளிப்படையாக விடக்கூடாது என்ற பாடத்தை பாகிஸ்தான் எடுத்துக்கொண்டதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.