காங்கிரஸ் எம்.பி. மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வைத்திருந்ததாக கூறப்படும் புகாரில், உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு 2019-ல் எழுந்தது. லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராக இருந்த காலத்தில், 2005 மற்றும் 2006 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளில் ராகுல் காந்தி தன்னை பிரிட்டன் குடியுரிமையாளர் என குறிப்பிடப்பட்டதாகவும், லண்டன் முகவரியும் சேர்க்கப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விக்னேஷ் சிஷிர், இதுதொடர்பாக லக்னோவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் குடியுரிமை விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனக் கூறி, அந்த நீதிமன்றம் கடந்த ஜனவரியில் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
லக்னோ கிளையில் நடந்த விசாரணையில், பிரிட்டன் அரசு அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்ற பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. மேலும் 2004 லோக்சபா தேர்தல் காலத்தில் லண்டனில் ‘பார்க்லேஸ்’ வங்கியில் கணக்கு இருப்பதாக ராகுல் ஒப்புக் கொண்டதாகவும் வாதிடப்பட்டது.
உத்தரவின் மூலம், இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டில் முறையான சரிபார்ப்பு அவசியம் என நீதிமன்றம் கூறியது. அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும், உ.பி. போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மாநில அரசு விசாரணை நடத்தலாம்; இல்லையெனில் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.




