காரைக்குடி பிரசார உரை

காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓட்டுக்காக பணம் மற்றும் “டோக்கன்” வழங்கும் அரசியலை கடுமையாக விமர்சித்தார்.

சிலர் தங்கள் பிள்ளைகளுக்காக பணம், சொத்து, தங்கம் போன்றவற்றை சேர்த்து வைக்க நினைப்பதாகவும், தாம் அடுத்த தலைமுறைக்கு சுத்தமான காற்று, குடிக்க நல்ல தண்ணீர், நஞ்சில்லாத உணவு ஆகியவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே நோக்கம் எனவும் அவர் கூறினார்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தன் கொள்கைக்கு எதிரானது என்றும், பணத்துக்காக வாக்கு வாங்கும் நடைமுறை ஜனநாயகத்தை பாதிக்கும் என்றும் சீமான் தெரிவித்தார். “பணநாயகம்” என அவர் குறிப்பிட்ட அரசியலை ஏற்க மாட்டேன் என்றும் கூறினார்.

ரூ.2000, ரூ.2500 போன்ற தொகை வாக்குறுதிகளும், ரூ.8,000 அல்லது ரூ.10,000 “டோக்கன்” போன்ற அறிவிப்புகளும் குறித்து பேசினார். “எந்த கடையிலும் கொடுத்து எது வேண்டுமானாலும் வாங்கலாம்” என்ற வகையில் டோக்கன் குறித்து சொல்லப்படுவதை சுட்டிக்காட்டி, அதைப் பரிசோதித்து பார்க்கலாம் என கேள்வி எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக, “நானும் டோக்கனை வாங்கிட்டு போய் ‘ஐயா’ கிட்ட கொடுத்து இந்த டோக்கனை வச்சிக்கிட்டு முதல்வர் பதவியை கொடுங்கன்னு கேட்கப் போறேன்” என கிண்டலாக கூறினார்.

மேலும், தன்னை இரண்டு மாதம் பேசக்கூடாது என்று மருத்துவர் அறிவுறுத்தியதாகவும், அதையும் குறிப்பிட்டு பிரசாரத்தைத் தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.