தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துவது மட்டும் போதாது; இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தும் ‘பிரீமியம்’ தொகையும் உயர்த்தப்படாவிட்டால் மக்களுக்கு கிடைக்கும் பயன் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் இணைந்து செயல்படுத்தப்படுவதால் சுமார் 1.52 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றன. திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.1,200 கோடிக்கு மேல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அரசு வழங்குவதாகவும், ஒரு குடும்பத்திற்கு ரூ.849 பிரீமியம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர்கள் விளக்கத்தில், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்தால் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் போன்ற செலவுகள் கணக்கில் கொண்டு குறைந்த தொகை அளவிலேயே காப்பீடு விடுவிக்கப்படுவதாக கூறினர். அதே சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் ஆகும் நிலையில், அந்த அளவிலான தொகையை விடுவிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் தயங்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், விண்ணப்பங்களில் பெரும்பங்கு நிராகரிக்கப்படுவதால் தனியார் மருத்துவமனைகள் திட்டத்தில் சிகிச்சை அளிக்க முன்வருவதில்லை என்ற களநிலவரத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். எனவே ரூ.10 லட்சம் வரம்பு உயர்வு நடைமுறைக்கு வந்தால், பிரீமியம் உயர்வும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் பயன் பெற அரசு தனியாக கண்காணிப்பு/மேற்பார்வை அமைப்பும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தினர்.