மதுரை: தமிழக சிறைகளில் ஒரு துண்டு பீடிக்காகவே கைதிகள் எதையும் செய்யத் துணிவதாகவும், சிறைக்குள் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாகவும் வந்த தகவலையடுத்து, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சங்கர் கண்காணிப்பை கடுமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உள்ளன. சிறைக்குள் பீடி, சிகரெட் புகைப்பதற்கு தடை உள்ளது. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு சென்று திரும்பும் சில கைதிகள் ஆசனவாய் அல்லது செருப்பில் கஞ்சாவை மறைத்து கொண்டு வந்து, சிறைக்குள் கூடுதல் விலையில் விற்பதாக தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சில காவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் கைதிகளை பார்க்க வரும் சில உறவினர்கள் கஞ்சாவை கொடுத்து செல்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீடி வாங்க பணம் இல்லாத கைதிகள் ஒரு துண்டு பீடிக்காக மோதலில் ஈடுபடுவதும், பீடி வாங்கிக்கொடுப்பவர்களிடம் அடிமைபோல் இருந்து எதையும் செய்யும் நிலையும் உருவாகிறது என கூறப்படுகிறது.
இது ஏ.டி.ஜி.பி. சங்கரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சுற்றறிக்கை அனுப்பி அனைத்து சிறை கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.





