கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். கிணத்துக்கடவு தி.மு.க. வேட்பாளர் சபரி கார்த்திகேயன், வால்பாறை சுதாகர், உடுமலை ஜெயக்குமார் ஆகியோருக்கும், பொள்ளாச்சியில் கொ.ம.க. வேட்பாளர் நித்தியானந்தனுக்கும் ஆதரவு திரட்டினார்.
பிரசார உரையில், அந்தப் பகுதியில் தி.மு.க. அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். சுந்தராபுரம் மற்றும் சிட்கோவில் தங்கநகை தொழில்பூங்கா அமைப்பதற்கான பணிகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, மதுக்கரை நகராட்சியில் ரூ.9 கோடி மதிப்பிலான தார்சாலை, திருமலையம்பாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தார்சாலை உள்ளிட்ட பணிகளை அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதுபோல், இந்தத் தேர்தல் ‘தமிழக அணி’க்கும் ‘டில்லி அணி’க்கும் இடையிலான போட்டி என அவர் தெரிவித்தார். ‘டில்லி அணியை’ வீழ்த்தி தி.மு.க. தலைமையிலான தமிழக அணியை வெற்றி பெறச் செய்வோம் என்றும் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் முதல்வரிடம் பேசி நிறைவேற்றுவதாகவும் அவர் கூறினார். தி.மு.க. ஆட்சியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை மேம்பாடு, பி.ஏ.பி. திட்டத்தை உருவாக்கியவர்களுக்கு சிலை, இனாம் நிலம் மற்றும் கோவில் நிலப் பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள், தனி மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம் உள்ளிட்டவை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கட்டணமில்லா பஸ், காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்வு, 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகை, 10 லட்சம் பேருக்கு வீடு கட்டித் தரும் திட்டம், அனைத்து மகளிருக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறிய அவர், கோடை கால சிறப்பு நிதியாக மூன்று மாதங்களுக்கு ரூ.5,000 செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.





