வாஷிங்டன்: அமெரிக்க H-1B விசா லாட்டரியில் இந்த ஆண்டு தேர்வு விகிதம் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. விசா கட்டணம் பெரிதளவில் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்கள் கணிசமாக குறைந்ததே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

சிறப்பு நிபுணத்துவம் தேவைப்படும் பணிகளில் வெளிநாட்டினரை பணியமர்த்த அமெரிக்காவில் H-1B விசா அவசியம். ஆண்டுக்கு 85,000 விசாக்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு டிரம்ப் காலத்தில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

புதிய விதிகளின்படி விசா கட்டணம் ரூ.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், பொதுவான லாட்டரி முறை மாற்றப்பட்டு, உயர்ந்த ஊதிய பணிகளுக்கு தகுதியானவர்களுக்கு லாட்டரியில் நான்கு வாய்ப்புகள் வழங்கும் விதி கொண்டு வரப்பட்டது. கட்டணம் தொடர்பான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் H-1B விண்ணப்பங்களுக்கு நிதி ஆதரவை குறைத்தன. வழக்கமாக ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இந்த ஆண்டு 2.35 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

விண்ணப்பங்கள் குறைந்ததால் லாட்டரி வாய்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது; முன்பு 33% ஆக இருந்த தேர்வு வாய்ப்பு தற்போது 75% வரை சென்றுள்ளது. இதே நேரத்தில் அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முதலீட்டை அதிகரித்து, மூத்த பணியாளர்களை அதிகம் பணியமர்த்தும் போக்குக்கு மாறியுள்ளதால், இளம் பொறியாளர்களுக்கு சவால் இருந்தாலும், உயர் திறன் கொண்டவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.