த.வெ.க. தலைவர் விஜய், துபாய் தலைமையிலான தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்படுகிறார் என்றும், அவரது தேர்தல் பிரசாரங்கள் அடிக்கடி ரத்தாகுவதற்குப் பின்னணியில் அந்த நிறுவனத்தின் ஆலோசனைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பாதுகாப்பு நிறுவனம் ‘ஜென்ட்டுர் செக்யூரிட்டி சர்வீசஸ்’. கேரளாவைச் சேர்ந்த நயீம் மூஸா இதை துபாயில் இருந்து நடத்தி வருகிறார். துபாய், கத்தார், குவைத், இந்தியா, ஓமன், மலேஷியா, பஹ்ரைன், சவுதி அரேபியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் சுமார் 200 வகையான பாதுகாப்பு சேவைகளை வழங்குவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் தலைமையகம் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சித் தரப்பில் கூறப்படுவதாவது, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான நயீம் மூஸா தற்போது விஜயுடன் இருந்து பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கிறார். பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் விஜயை சந்திக்க முன்பாக அனுமதி பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கரூர் சம்பவம்’க்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதும் அதிகரிக்கப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர். முன்பு ஐந்து பாதுகாவலர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது விஜயின் பிரசார பயணத் திட்டங்களை கண்காணிக்க கூடுதலாக சுமார் 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த குழு பொதுமக்களுடன் கலந்து செயல்பட்டு, விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் கூட்ட நெரிசலை உடனுக்குடன் கண்காணித்து, பிரசாரத்தை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பதை முடிவு செய்கிறது என தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் சில பிரசாரங்கள் ரத்தாகி, அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாகவும், கரூர் சம்பவத்துக்குப் பின் இதற்காக மாதந்தோறும் விஜய் பல லட்சம் ரூபாய் செலவிடுவதாகவும் கட்சி தரப்பு கூறுகிறது.