ஆற்று மணலை உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஏப்.28 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை கரூர் நகர காவல் நிலைய போலீசார் கடந்த பிப்ரவரியில் பதிவு செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆற்று மணல் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியபோது, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடு மார்ச் 31 அன்று முடிவடைந்தது.

இதையடுத்து, சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். கரூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதால் மார்ச் 30 அன்று வேட்புமனு தாக்கல் செய்ததும், மார்ச் 31 அன்று மகாவீர் ஜெயந்தி விடுமுறை இருந்ததாலும் சரணடைய முடியவில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுவை ஏற்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, முன்ஜாமின் உத்தரவின்படி சரணடைவதற்கான கால அவகாசத்தை ஏப்.28 வரை நீட்டித்தார். மேலும், ஏப்.29, ஏப்.30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் காலை 10:30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார்.