நடப்பு தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவாளர்கள் தங்களின் ஓட்டுகளை “வீணாக்க வேண்டாம்” என்றும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் சமீப காலத்தில்தான் அரசியலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். விஜய் கட்சி தொடங்கியதற்கான நோக்கம் திமுகவை எதிர்த்து ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் என்றும், அதே இலக்கை தங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் கூறினார்.

இந்த தேர்தலில் விஜய் கட்சி ஓரளவு வாக்குகளை பெறலாம்; ஆனால் வெற்றி பெற முடியாது என அவர் தெரிவித்தார். திமுகவை தோற்கடிப்பதே நோக்கம் என்றால், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் அந்த இலக்கு நிறைவேறும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றும், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவும், விஜய் ஆதரவாளர்களின் வாக்குகளும் தேவை என்றும் கூறினார். திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.