சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் 6 தலைப்புகளின் கீழ் மொத்தம் 20 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை உலகத் தர நகரமாக உயர்த்தும் நோக்கில் இது ‘சென்னை சூப்பர்-6’ திட்டங்களாக அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து துறையில் புதிதாக 1,000 மினி பஸ்கள் இயக்கப்படும் என்றும், மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் நிறைவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 2029க்குள் உலகத் தரம் வாய்ந்த எழில்மிகு சாலைகள் அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக, ஏஐ, அனிமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுக்கான மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தர உட்கட்டமைப்பு, உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றுடன் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், 20 ஆயிரம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற சேவைகள் மற்றும் விலங்கு நலன் தொடர்பாக, கால்நடை டாக்டர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுப்படுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், மழை நீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும் என்றும், பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்; அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெரு விளக்குகள் அமைக்கப்படும்; கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென தனித்துவமான உலகத் தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.