காங்கிரஸ் எம்.பி. ராகுல் மீது இரட்டை குடியுரிமை குற்றச்சாட்டை முன்வைத்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என முன்பு வழங்கப்பட்ட வாய்மொழி உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
2019ல் எழுந்த இந்த குற்றச்சாட்டில், ராகுலுக்கு இந்தியாவுடன் சேர்த்து பிரிட்டனிலும் குடியுரிமை இருப்பதாக கூறப்படுகிறது. லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் இயக்குநராக இருந்த காலத்தில், 2005–06 ஆண்டறிக்கைகளில் பிரிட்டன் குடியுரிமை குறிப்பிடப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விக்னேஷ் சிஷிர், ராகுலின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உத்தர பிரதேச போலீசார் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம் என்றும், வழக்கை சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் வாய்மொழியாக தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது வெளியான உத்தரவில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன் அறிவிப்பு அளிக்கும் வகையில் முறையான நோட்டீஸ் வழங்க வேண்டுமா என்பது குறித்து சட்ட ரீதியாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணையின் போது முன்னறிவிப்பு தொடர்பான சட்டத் தேவையை எந்தவொரு வழக்கறிஞரும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி, இந்த விவகாரம் ஏப்.20 அன்று மீண்டும் விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், ராகுலுக்கு இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளது.





