மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், சென்னையில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் பேசியபோது, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோவில்கள் தொடர்பாக செய்த பணிகளைப் பாராட்டினார்.
அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், ராஜராஜ சோழனை விட சேகர்பாபு கோவில்களுக்கு அதிகம் செய்ததாகவும் தெரிவித்தார். மேலும், தி.மு.க.வில் நல்ல உள்ளங்கள் பலர் இருப்பதாகச் சொல்லி, அதை சிறு வயதிலிருந்தே பார்த்து வருவதாகக் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தன்னுடைய நட்பு பல தலைமுறைகள் தாண்டியதாகவும், அது தற்பெருமை அல்ல என்றும் கமல் கூறினார். அரசு வழங்கும் ‘8,000 ரூபாய் கூப்பன்’ குறித்து சிலர் கேள்வி எழுப்புவதாகச் சொல்லி, அணைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற பொதுச் சொத்துகள் மக்களுக்கே உரியது என்ற கோணத்தில் விளக்கினார்.
மேலும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களுக்கு வருமான வரித்துறை சோதனை வந்ததுண்டா என கேள்வி எழுப்பிய அவர், எதிர்தரப்புக்கு ஓட்டு போட்டால் பிரதமரும் தமிழக முதல்வரும் டில்லியில்தான் இருப்பார்கள் என விமர்சித்தார். தமிழக முதல்வர் தமிழகத்திலேயே தமிழ் உணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அவர் பிரசார மேடையில் பேசினார்.





