வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் தி.மு.க பொதுச்செயலரும் அமைச்சருமான துரைமுருகன் போட்டியிடுகிறார். வயது காரணமாக இந்த தேர்தலில் அவர் காட்டும் நபருக்கு சீட் வழங்கலாம் என கட்சி தலைமையில் முன்பு ஆலோசனை இருந்ததாகவும், ஆனால் அவர் தானே போட்டியிட விரும்பியதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. துரைமுருகன் சிரமப்பட்டே பிரசாரம் செய்து வருவதாகவும் தகவல்.
துரைமுருகனும், அவரது மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்தும், சொந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கே போதிய உதவி செய்யவில்லை என்ற புகார்கள் உள்ளன. இதன் பின்னணியிலேயே 2021 சட்டசபை தேர்தலில் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், துரைமுருகன் குடும்பத்தினர் கட்சியினர் மற்றும் தொண்டர்களை “கவனிக்காமல்” இருந்து, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களை மட்டும் “கவனிக்க” திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்குக் காரணமாக “மத்திய முகமை அமைப்புகள் கண்காணிக்கின்றன” என சிலர் கூறுவதாக தகவல். இதை அறிந்த கட்சி தலைமை, காட்பாடியில் வெற்றி பெற வேண்டுமெனில் கட்சியினர் முதல் வாக்காளர்கள் வரை அனைவரையும் பாரபட்சமின்றி தாராளமாக கவனிக்க வேண்டும் என உத்தரவிட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.




