பாட்னா: பீஹாரில் நீண்ட காலம் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் திடீரென பதவி விலகி, ராஜ்யசபா எம்.பி. ஆக மாறியிருப்பது அவரது நெருங்கிய வட்டாரத்தினரிடையே கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
முந்தைய சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கடந்தாண்டு நடந்த தேர்தலில் அந்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. கூட்டணி கட்சியான பா.ஜ.க. 89 இடங்களை கைப்பற்றியது. தேர்தல் பிரசாரத்தில் இரு கட்சிகளும் “நிதிஷ் குமார் தான் முதல்வர்” என முன்னிறுத்தினாலும், எதிர்க்கட்சிகள் “சிறிது காலத்திற்குப் பிறகு பா.ஜ.க. முதல்வர் ஆகிவிடுவார்” என கூறி வந்தன.
அந்த கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. துணை முதல்வராக இருந்த பா.ஜ.க. தலைவர் சாம்ராட் சவுத்ரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், முன்பு ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐ.ஜ.த. ஆகியவற்றில் இருந்தவர்; 2017ல் பா.ஜ.க.வில் இணைந்தார்.
நிதிஷ் குமார் பதவி விலகுவதற்கு உடல்நிலை ஒரு முக்கிய காரணம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் பிரசாரத்திற்கு முன்பே, “பிரசாரத்தில் நீங்கள் முதல்வர் என கூறினாலும், இறுதியில் முதல்வர் பதவி பா.ஜ.க.வுக்கே” என்று அமித் ஷா உள்ளிட்டோர் நிதிஷிடம் கறாராக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கு ஐ.ஜ.த. மூத்த தலைவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது கேள்வியாக உள்ளது. மத்திய அரசில் பதவி ஏற்க நிதிஷ் விரும்பவில்லை; தற்போது ராஜ்யசபா எம்.பி. ஆகவே செயல்பட விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், “பீஹாரில் ஐ.ஜ.த. வீழ்ச்சி தொடங்கிவிட்டது” என எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை தொடங்கியுள்ளன.





