புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ‘இண்டி’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர்களிடையே பரவிய தகவலின்படி, அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். ஆனால் அவர் தனியாக வராமல், ‘ஜேக் ருசல் டெரியர்’ வகையைச் சேர்ந்த ‘பிடி’ என்ற பெயருடைய தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆலோசனை நடந்துகொண்டிருக்கும்போது நாய் வெளியே புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ராகுலின் கவனம் அடிக்கடி அங்கேயே சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர் நாயை உள்ளே கொண்டு வர பாதுகாவலரிடம் அவர் சொன்னதாகவும் தகவல்.

கூட்டம் நடைபெறும் இடத்தில் நாய் எதற்கு என்று சிலர் கேள்வி எழுப்பிய நிலையில், ராகுல் வெளியே சென்று நாயுடன் விளையாடியதாகவும், அதன் பெருமையை மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே அவர் புறப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதுபோன்ற முக்கிய முடிவுகளை கூட்டணி தலைவர்களுடன் ஆலோசித்து கார்கே முடிவெடுத்ததாக தகவல்.

மேலும், ‘ராகுலுக்கு நாய்தான் பொழுதுபோக்கு’ என்ற ஒருவரின் கருத்துக்கு, ‘அவருக்கு அரசியலே பொழுதுபோக்கு’ என்ற பதில் வந்ததாகவும், அதைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் சிரித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.